ஊதுபத்தி எந்திரத்தில் சிக்கி 17 வயது சிறுவன் சாவு
- 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு பணியாற்றி வந்தார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமாக ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
அந்த தொழிற்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் காலை 10 மணி அளவில் பணிகள் தொடங்கியது.
தொழிற்சாலையில் பணிபுரியும் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் 17 வயது மகன் மோகன் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஊதுபத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
ஊதுபத்தி மாவு கலக்கும் எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சிறுவனின் கை எந்திரத்தில் சிக்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் எந்திரத்தில் சிக்கிக்கொண்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுக்கா போலீசார் சிறுவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.