உடுமலை மக்கள் நீதி மன்றத்தில் 236 வழக்குகளுக்கு தீர்வு
- ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது.
- மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது.
உடுமலை :
உடுமலையில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் எண்.1 செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார்.அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே. எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அதன்படி சிறு குற்றத்திற்குரிய வழக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 600 க்கும், காசோலை மோசடி வழக்குகள் ரூ.24 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், வங்கி வராக்கடன் வழக்குகள் ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்து 492 க்கும்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.1 கோடியே 21 லட்சத்து 26 ஆயிரத்து 950 க்கும், ஜீவனாம்ச வழக்குகள் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்குகள் ரூ.28 லட்சத்து 42 ஆயிரத்து 360 க்கும் என மொத்தம் 416 வழக்குகள் எடுக்கப்பட்டு 236 வழக்குகளுக்கு ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது. இதில் அரசு வக்கீல் சி.பி.ரவிச்சந்திரன், வக்கீல் சங்க செயலாளர் கே.எம்.ராஜேந்திரன்,வக்கீல்கள் பசீர்அகமது,பிரபாகரன் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.