மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 59 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு
- முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் செயல்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 59 ஆயிரத்து 315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் 23 ம் தேதி வரை 4 நாட்கள் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் தொடங்கி 4 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,135 நியாயவிலைக் கடைகளில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 827 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 5,34,460 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
2ம் கட்டமாக, 308 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 2,83,884 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் வருகிற 5ம் தேதி முதல் 16 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் 2 வது கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.
இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.