பின்னலாடை கண்காட்சியில் ரூ.400 கோடிக்கு வர்த்தக விசாரணை
- கண்காட்சியை 30 முகவர்கள், 325 முன்னோடி வர்த்தக அலுவலகத்தினர் பார்வையிட்டனர்.
- ரூ.200 கோடிக்கு ஆர்டர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
இந்திய நிட்பேர் அசோசியேசன் சார்பில் 49-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருமுருகன் பூண்டி அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த கண்காட்சி குறித்து இந்திய நிட்பேர் அசோசியேசன் தலைவரும், இந்திய
ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது :- கண்காட்சியை 30 முகவர்கள், 325 முன்னோடி வர்த்தக அலுவலகத்தினர், வர்த்தக விசாரணை அலுவலர்கள் பார்வையிட்டனர். மேலும் புதிதாக அமெரிக்கா, ஐரோப்பா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, வங்கதேசம், சவுதி அரேபியாவில் இருந்து வர்த்தக முகவர்கள் வந்து பார்வையிட்டுள்ளனர். 3 நாட்களில் செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பு தொடர்பாக ரூ.400 கோடிக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது. அதில் உடனடியாக ரூ.200 கோடிக்கு ஆர்டர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி மூலமாக பருத்தி இல்லாத செயற்கை நூலிழை ஆடைகளுக்கான ஏற்றுமதி ஆர்டர் வர்த்தக விசாரணை நடைபெற்றுள்ளது. இதன் மூலமாக அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரத்து 200 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். கண்காட்சியில் பங்கேற்றவர்கள், முகவர்களின் எதிர்பார்ப்பை இந்த கண்காட்சி திருப்திப்படுத்தியது. 50-வது பொன்விழா கண்காட்சியில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.