பல்லடத்தில் தனி வட்டார வளர்ச்சி அலுவலரை நியமிக்க வேண்டும் - ஊரக வளர்ச்சித்துறையினர் கோரிக்கை
- ஆட்களை நியமிப்பது போன்ற பொய் கணக்கு காண்பித்து முறைகேடுகள் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
- ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை, ஊராட்சி நிர்வாகத்தையும் கவனிப்பதால் வேலை பளு அதிகரித்துள்ளது.
பல்லடம்:
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது;- தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது. இத்திட்டத்தில் பணியாளர்களை நியமிப்பதில் பாரபட்சம், ஆட்களை நியமிப்பது போன்ற பொய் கணக்கு காண்பித்து முறைகேடுகள் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
இதற்கிடையே ஊரக வளர்ச்சி துறை மூலம் மத்திய அரசின் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், தூய்மை பாரதம், தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டம், மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பணிகளை கவனத்தில் கொண்டு ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை, ஊராட்சி நிர்வாகத்தையும் கவனிப்பதால் வேலை பளு அதிகரித்துள்ளது. எனவே இது போன்ற பிரச்சனைகளை களையவும், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிசெயலாளர் உள்ளிட்டோரின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில், மற்ற மாநிலங்களைப் போன்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கென தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.