வாகனம் பழுது பார்ப்போருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் - சங்க கூட்டத்தில் தீர்மானம்
- அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
- ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்.
பல்லடம் :
தமிழக நான்கு சக்கர மற்றும் கனரக வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. பல்லடம் பகுதி சங்கத் தலைவர் சக்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் முனியப்பன், செயலாளர் ஹேன்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வாகனம் பழுது பார்ப்போருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். பல்லடத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜா, துணைச்செயலாளர்கள் முருகன், சுபாகர், மாவட்ட பிரதிநிதி மாரிராஜா, மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.