உயர் ரக தென்னை விற்பனைக்கு தடை - விவசாயிகள் வலியுறுத்தல்
- உயர் ரக தென்னை நடவு செய்த விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
- உயர் ரகத் தென்னை தோல்வியை தழுவியது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல நர்சரிகள் மீண்டும் தென்னங்கன்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பூர் :
பசுமை புரட்சிக்கு பின் உயர்ரக தென்னை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் இனிப்பு சுவை மற்றும் காய்ப்பு திறன் அதிகம் என்பதால் பல விவசாயிகள் உயர் ரக தென்னை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
துவக்கத்தில் நன்றாகத்தான் இருந்தது. காலநிலை மாற்றம் காரணமாக தென்னையிலும் பூச்சி தாக்குதல் அதிகரித்தது. வீரியமிக்க பூச்சிக்கொல்லிகள் தெளித்தும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பாரம்பரிய நாட்டுத் தென்னை மரங்கள் பூச்சி தாக்குதலை சமாளித்து நிற்கின்றன.ஆனால் உயர் ரக தென்னை மரங்கள் காய்ப்பு திறனை இழந்து விட்டது. பல்லாண்டு பயிரான தென்னையை வளர்த்த விவசாயிகள், அழிக்கவும் மனமில்லாமல் பராமரிக்கவும் முடியாமல் தவிக்கின்றனர். இதனால் உயர் ரக தென்னை நடவு செய்த விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
உயர் ரகத் தென்னை தோல்வியை தழுவியது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல நர்சரிகள் மீண்டும் தென்னங்கன்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி விவசாயிகள் இவற்றை வாங்கி ஏமாறுவது தொடர் கதையாக உள்ளது.எனவே அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து உயர் ரகத் தென்னங்கன்று உற்பத்திக்கு மற்றும் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.