450 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு - அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் மும்முரம்
- சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
- 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் வரும் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வரு–கிறது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்கள் முன்பதிவு பணி தொடங்கியது. இதனை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலுசாமி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி, பொருளாளர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முன்பதிவில் மொத்தம் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
இதனிடையே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அளித்த மனுவில், 'அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என்று ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவையும் இணைத்துள்ளேன். அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.