உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பின்னலாடை தொழிலை காப்பாற்ற மத்திய அரசு கடன் சலுகைகள் வழங்க வேண்டும் - ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

Published On 2023-05-24 10:54 GMT   |   Update On 2023-05-24 10:54 GMT
  • ரஷ்யா - உக்ரைன் போர் 15 மாதங்களை கடந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
  • பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

திருப்பூர் :

ரஷ்யா - உக்ரைன் போர் 15 மாதங்களை கடந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போர்சூழல் மாறாததால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கையை பின்பற்றி வருகின்றன. இருநாடுகளுக்கு இடையே நடக்கும் போர் வணிக தொடர்புடைய அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் அந்நாடுகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் திருப்பூரும் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. பஞ்சு - நூல் விலை, மின்சாரம், தொழிலாளர் என அனைத்து வகை கட்டமைப்பு வசதிகளுடன் பின்னலாடை தொழில் ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

இருப்பினும் இறக்குமதி நாடுகளில் சில்லரை விற்பனை முடங்கும் நிலையில் இருப்பதால் திருப்பூரில் இருந்து அனுப்பிய ஆடைகள் தேக்க மடைந்துள்ளன.கிடங்கில் இருந்து சரக்கு பெறப்படாமலும் இருக்கிறது. இதனால் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் துவங்கிய பாதிப்பில் இருந்து திருப்பூர் முழுமையாக மீளவில்லை. நூல் விலை உயர்வை சமாளித்த வர்த்தகர்கள், மீண்டும் சோதனையை எதிர்கொண்டுள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆர்டர் வரத்து குறைந்துள்ளதால் திருப்பூரின் அடுத்த நகர்வு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இக்கட்டான இந்நிலையில் கொரோனா காலத்தில் வழங்கியது போல் மத்திய அரசு சார்பில் கடன் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம் கூறியதாவது :- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. நூல் விலை உயர்வுக்கு பிறகு ஏற்பட்ட சரிவு இதுவரை சரியாகவில்லை. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.குளிர்கால ஆர்டர் புக்கிங் முடிந்த நிலையில் திருப்பூருக்கான ஆர்டர்கள் 40 சதவீதம் வரை குறைந்து போக வாய்ப்புள்ளது. விசாரணை இருந்தும், ஆர்டர் உறுதியாகவில்லை. குறு, சிறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் திகைத்துப்போயுள்ளன.

ஊரடங்கு நேரத்தில் மத்திய அரசு சலுகை வழங்கி காப்பாற்றியது. நிலுவையில் உள்ள வங்கிக்கடனில் 30 சதவீதம் கூடுதல் கடன் வழங்கப்பட்டது. தற்போது 20 சதவீதம் கூடுதல் கடன் வழங்க வேண்டும். மேலும் 6 மாத காலத்துக்கு கடன் மீதான வட்டி மற்றும் தவணை செலுத்துவதில் இருந்தும் சிறப்பு சலுகை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஜூன் மாதம் துவங்கிய பாதிப்பில் இருந்து திருப்பூர் முழுமையாக மீளவில்லை. நூல் விலை உயர்வை சமாளித்த வர்த்தகர்கள் மீண்டும் சோதனையை எதிர்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News