1 முதல் 5-ம் வகுப்பு வரை திறப்பு பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் வந்த குழந்தைகள் - ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்
- பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள்ளது.
திருப்பூர் :
கோடை விடுமுறை முடிந்து இன்று1 முதல், 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், பல்லடம் , உடுமலை உள்பட அனைத்து இடங்களில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். குழந்தைகள் என்பதால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 1-ம்வகுப்பு சேர்ந்த சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள் ளது. இவற்றில் 6முதல், பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து 673 பேர் கல்வி பயில்கின்றனர். பள்ளி திறந்த கடந்த 12ந்தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 545 பேர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 6,128 பேர் (5 சதவீதம்) பள்ளிக்கு வரவில்லை. நடப்பு வாரத்துக்குள் இவர்கள் பள்ளிக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 1-ம்வகுப்பில் 2,645 மாணவர்கள் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர். 2-ம் வகுப்பில் 220, 3-ம் வகுப்பில் 238, 4-ம் வகுப்பில் 241, 5-ம் வகுப்பில் 240, 6-ம் வகுப்பில் 532 பேர் இணைந்துள்ளனர். 7 மற்றும் 8-ம் வகுப்பில் முறையே 65 மற்றும் 62 பேர் என மொத்தம், 4,243 பேர் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர்.
தமிழை முதன்மை பாடமாக தேர்வு செய்து படிக்க 1,351 மாணவர், 1,290 மாணவிகள் என 2,641 பேர் இணைந்துள்ளனர். ஆங்கில மீடியம் படிப்பை 840 மாணவர், 762 மாணவிகள் என 1,602 பேர் தேர்வு செய்துள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலர் அமுதா கூறுகையில், இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவருக்கும் நோட்டு வழங்கப்படும். ஒரு வாரத்துக்குள் விடு பட்டவர்களுக்கு வழங்க தேவையான புத்தகம் பள்ளிகளில் இருப்பில் உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீருடை, காலணி உள்ளிட்ட நலத்திட்டங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றார்.