தனியார் நிறுவனம் மூலம் திருப்பூர் மாநகரில் தூய்மைப்பணி தொடக்கம்
- வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தனியார் நிறுவனம் தூய்மைப்பணிக்கு, அகற்றப்படும் குப்பை கழிவுகளின் டன் கணக்கீடு அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளது.மாநகராட்சி பகுதியில் முழுமையாக குப்பை கழிவுகள் சேகரித்து அவற்றை முறைப்படி அழிக்கும் வரையிலான முழுமையான பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக, தற்போது வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இப்பணிக்கு இதற்கு முன்னர் மாநகராட்சி பயன்படுத்திய நிர்வாகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தபடவுள்ளது. மேலும், வார்டு பகுதியில் தூய்மைப்பணிக்கு உரிய எண்ணிக்கையிலான ஆட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெண்டர் எடுத்த நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவ்வகையில் கடந்த, 1-ந் தேதி முதல் நிறுவனம் நடத்திய சோதனை அடிப்படையிலான தூய்மைப் பணி நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று முதல் முழு வீச்சில் தனியார் நிறுவனம் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி முழுமையாக தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இதற்கான பணியாளர்களை நிறுவனம் முழுமையாக நியமித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 685 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.