உள்ளூர் செய்திகள்

மக்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்களின் காட்சி.

உடுமலை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

Published On 2023-09-25 10:08 GMT   |   Update On 2023-09-25 10:08 GMT
  • வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்து உள்ளது.
  • வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர்.

உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்து உள்ளது. கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள், தண்ணீருடன் கூடிய பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்வதாக தெரிகிறது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில் "வறட்சி நிலவி வருகின்ற தற்போதைய சூழலில் உணவு, தண்ணீரைத் தேடிக் கொண்டு ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் முகாமிட்டு உள்ளது.அப்போது அவை வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை தின்று விடுகின்றது. இதனால் வனவிலங்குகள் படிப்படியாக உடல் ஆரோக்கியத்தை இழந்து பரிதாபமாக உயிரிழந்தும் வருகின்றன.

அதன் இறப்பின் காரணத்தை கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் போது வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.அலட்சியத்துடன் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் வன விலங்குகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை ஒருவரும் சிந்திப்பதில்லை. நமது ஆரோக்கியத்தை காப்பாற்றும் வனத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் கடவுள்தான்.இயற்கை மற்றும் வனத்தை பாதுகாக்கும் வனவிலங்குகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

எனவே வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர். இதற்கிடையில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வனப்பகுதியில் மக்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News