தி.மு.க. விடியல் அரசு இல்லை, வீடியோ அரசு, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் - நடிகை விந்தியா பேச்சு
- அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை
திருப்பூர் :
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது:-
தி.மு.க. விடியல் அரசு இல்லை. வீடியோ அரசு. விளம்பரத்தை மட்டும் தான் செய்கிறார்கள். மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமூக நீதியும், பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாக சேர்ந்து வளர்வதே திராவிட மாடல். பெரியாரும், அண்ணாவும் அதைத்தான் நினைத்தார்கள். அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜனதா வந்துவிடும் என்று தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இன்று தி.மு.க.வினர் வந்து அனைத்தையும் சுருட்டி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
விரைவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர வைப்போம் என்று சபதமேற்போம். திருப்பூருக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்து 4-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். 99 சதவீதம் முடிந்து விட்டது. மீதம் 1 சதவீத பணியை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது. தொழில் நகருக்கு தேவையான குடிநீரை தராமல், காலதாமதம் செய்கிறது. விரைவில் 4-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்காவிட்டால் தாய்மார்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிவசாமி, எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேசன், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி, மகேஷ்ராம், கருணாகரன், அரிகரசுதன், திலக்நகர் சுப்பு,
அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, வக்கீல் அணி செயலாளர் முருகேசன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.