உரிய விலை கிடைப்பதால் பருத்தி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்
- 6 மாதமாக பஞ்சு, நூல் விலை உயர்வால் பருத்திக்கு வரலாறு காணாத விலைகிடைத்தது.
- நிலக்கடலை விவசாயிகள் சிலர் பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
அவிநாசி :
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், அந்தியூர், கோபி உள்ளிட்ட இடங்களில் 15 முதல் 20 ஆயிரம் ஏக்கர் வரை நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் தான் நிலக்கடலை பயிரிடப்படும் என்ற நிலையில் பருவமழையை கணித்து, எதிர்பார்த்து தான் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர்.மே மாதம் சாகுபடி செய்த விவசாயிகளின் தோட்டங்களில் தற்போது நிலக்கடலை பயிர் பூத்து, காயாக உருமாறும் நிலைக்கு வந்துள்ளது. இவை செப்டம்பரில் அறுவடை செய்யப்படும்.
சில இடங்களில் உள்ள விவசாயிகள் இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் சாகுபடியை துவக்குவர். இது நவம்பர் மாதம் அறுவடைக்கு தயாராகும். விளைவிக்கப்படும் நிலக்கடலை சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் ஏலத்தில் விற்கப்படும்.
இந்நிலையில்கடந்த 6 மாதமாக பஞ்சு, நூல் விலை உயர்வால் பருத்திக்கு வரலாறு காணாத விலைகிடைத்தது.அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் கூட அதிகபட்சம், கிலோ பருத்திக்கு 100 முதல் 140 ரூபாய் வரை கிடைத்தது.
இந்த விலை நீட்டிப்பு தொடரும் என்ற எதிர்பார்ப்பில் நிலக்கடலை விவசாயிகள் சிலர் பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளனர் என கூறப்படுகிறது. இது குறித்து வேளாண்மை துறையினர் கூறுகையில்,நிலக்கடலை சாகுபடி பரப்பு குறைந்திருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பு குறித்த துல்லியமான விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரம் இந்த வாரம் தெரிய வரும் என்றனர்.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில்,கடந்தாண்டு(2021) 4,000 மெட்ரிக் டன் நிலக்கடலை விற்பனை செய்யவும், 40 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யவும் விற்பனை வணிகத்துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த இலக்கை எட்டி விட்டோம். நடப்பாண்டு 4,500 மெட்ரிக்., டன் நிலக்கடலை விற்பனை செய்யவும் ரூ. 48 கோடிக்கு வர்த்தகம் செய்யவும் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏல விற்பனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.