உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மாலை முதல் இரவு வரை கொட்டி தீர்த்தது - திருப்பூர் மாவட்டம் முழுவதும் 624.30 மி.மீ., மழை பதிவு

Published On 2023-05-02 10:25 GMT   |   Update On 2023-05-02 10:25 GMT
  • திருப்பூரில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
  • தாராபுரம் சாலை பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது.

ருப்பூர்:

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதே போல் திருப்பூர் பகுதியிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தயங்கும் நிலை உருவானது. நாள் முழுவதும் கொளுத்தும் வெயிலால் இரவு நேரத்தில் வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருப்பூரில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதன் காரணமாக ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அவினாசி ரோடு, குமரன் ரோடு, பி.என்.ரோடு உள்பட மாநகரில் பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் ஆற்று பாலம், ஊத்துக்குளி ரோடு ரெயில்வே பாலம், போயம்பாளையம் பிரிவு உள்பட மாநகரில் உள்ள தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இடைவிடாமல் பெய்த மழையால் திருப்பூரில் கத, கதப்பான நிலை மாறி குளு, குளு சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காங்கயத்தில் பல்வேறு இடங்களில் மாலை 4 மணியளவில் தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தொடா்ந்து இரவு 8 மணி வரையில் மழை பெய்தது.

இதனால் காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூா் சாலை, கரூா் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. பலத்த மழையால் காங்கயம் நகரில் மின்தடை ஏற்பட்டது. மேலும் வாரச் சந்தை நாள் என்பதால் மாலை நேரத்தில் பெய்த மழையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-55, கலெக்டர் முகாம் அலுவலகம் -100.40, திருப்பூர் தெற்கு அலுவலகம் -61, கலெக்டரேட் அலுவலகம்- 64, அவினாசி தாலுகா அலுவலகம்-40, ஊத்துக்குளி தாலுகா அலுவலகம்-74, மடத்துக்குளம்-3, தாராபுரம்-15, மூலனூர்-7, குண்டடம்-17, உப்பாறு அணை-35, நல்லதங்காள் ஓடை- 12, உடுமலை-1, அமராவதி-1, காங்கயம்-39.20, வெள்ளகோவில்-13.30, வட்டமலை கரை ஓடை-62,40, பல்லடம்-24. மாவட்டம் முழுவதும் மொத்தம் 624.30 மி.மீ., மழை பெய்துள்ளது. 

Tags:    

Similar News