கள் இறக்கும் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி பங்கேற்கும் - தலைவர் செல்லமுத்து பேட்டி
- தவறான செய்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.
- டெல்லி வரை சென்று மத்திய விவசாய அமைச்சரை சந்தித்து கள் இறக்க அனுமதி கிடைக்க போராடுவோம்.
பல்லடம்:
கள் இறக்கும் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் கலந்து கொள்வோம். இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பல்லடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கள் இறக்குவது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறிய கருத்து தவறாக பரவியுள்ளது.அவர் அப்படி கூறவில்லை .இருந்த போதிலும் அந்த தவறான செய்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.
மேலும் கள் இறக்க அனுமதி வேண்டும் என்று போராடி வருகிற விவசாய சங்க தலைவர்கள் மனதும் வேதனைப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். விவசாய சங்கங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட தவறான செய்தி காரணமாக அமைந்து விட்டபடியால், நடந்துவிட்ட தவறுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் படுகின்ற கஷ்டத்தை கருத்தில் கொண்டு டெல்லி வரை சென்று மத்திய விவசாய அமைச்சரை சந்தித்து கள் இறக்க அனுமதி கிடைக்க போராடுவோம்.
தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணமான பாமாயிலை தடை செய்ய வேண்டும், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். தமிழக முழுவதும் உள்ள தேங்காய்களை மத்திய அரசு நேபிட் மூலமாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியது.
மேலும் தமிழக அரசின் உணவுதுறை அமைச்சரை சந்தித்து ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வலியுறுத்தியுள்ளோம். அவரும் கொள்கை அளவில் அதனை ஏற்று பரிட்சார்த்தமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
வெளி சந்தையில் தேங்காய் எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 200க்கு விற்கப்படுகிறது ரேசன் கடையில் என்ன விலைக்கு விநியோகிப்பீர்கள் என்று அவரை கேட்ட பொழுது, அரை லிட்டர் ரூ.25 க்கு விநியோகம் செய்யப்படும். மேற்கொண்டு அதிகப்படியான தொகையை அரசு மானியமாக ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தென்னை விவசாயின் கஷ்டம் நீக்கப்பட்டு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் உழவர் உழைப்பாளர் கட்சியின் நோக்கம்.
இதில் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேறுபாட்ைட உண்டாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.மேலும் 2024 ஜனவரி 21ஆம் தேதி தமிழக முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று கள் இயக்க தலைவர் நல்லசாமி அறிவித்திருக்கிறார். இந்தப் போராட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவித்து அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு பெண்களின் வாக்கு வங்கியை கவர்வதற்காக கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 அறிவித்தது.தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் வங்கிகளுக்கு சென்று பார்த்த போது பாதி பேருக்கு பதிவும் வரவில்லை, பணமும் வரவில்லை. இதனால் வங்கிகள் முன்பும், இ. சேவை மையங்கள் முன்பும் பெண்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து தேர்தல் அறிவிப்பில் கூறியதை போல் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், ஊடக பிரிவு செயலாளர் காடம்பாடி ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.