ஐப்பசி பட்ட சாகுபடி விளை நிலங்களை தயார்படுத்தும் விவசாயிகள்
- மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.
- சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது.
குடிமங்கலம்,:
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மொச்சை, சோளம், கொண்டைக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட சாகுபடி அதிக அளவு மேற்கொள்ளப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொழிவு தாமதம், பனிப்பொழிவு குறைவு உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்களால் மானாவாரி சாகுபடியில் நிலையான விளைச்சல் கிடைப்பதில்லை. எனவே இத்தகைய சிறுதானிய சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தாண்டும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. புரட்டாசி மாத துவக்கத்திலும் மழை இல்லை. இதனால் மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.
இந்நிலையில் கடந்த வாரம் உடுமலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இதையடுத்து மானாவாரி சாகுபடிக்கு முன்னோட்டமாக உழவுப்பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், மானாவாரி சாகுபடியில் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். இந்தாண்டு தாமதமாகவே விதைப்பு செய்யும் நிலை உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது. பருவமழை கைகொடுத்தால் இந்தாண்டு நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.