கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி
- தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் -டீ கல்லூரியில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
கடந்த 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சி அளிக்க கல்லூரியின் திறன் பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உபகரணங்களுடன் இலவசமாக பேஷன் டிசைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.