உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டக் காட்சி. 

உடுமலையில் 2-வது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2023-09-21 10:31 GMT   |   Update On 2023-09-21 10:31 GMT
  • சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.
  • உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

உடுமலை:

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18 ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி,இந்து சாம்ராஜ்ய மக்கள் இயக்கம், இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) மற்றும் பொதுமக்கள் சார்பில் 318 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை செய்தும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வந்தனர்.

அதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.

செண்டை வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் கல்பனா சாலை,கச்சேரி வீதி,பெரிய கடை வீதி, பழனி ரோடு வழியாக ஊர்வலம் அமராவதி ஆற்றை நோக்கி சென்றது. ஊர்வலத்தையொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

போலீசார் முன்னே செல்ல ஊர்வலம் அதைத் தொடர்ந்து சென்றது. ஊர்வலதை யொட்டி உடுமலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதியில் பிரதிஷ்டை செய்த சிலைகளை தவிர மற்ற விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வு நேற்றுடன் முடிவடைந்தது.

Tags:    

Similar News