வெங்காயம்-வாழைப்பயிா்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
- காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.
- இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும்.
திருப்பூர்,செப்.24-
வெங்காயம், வாழைப்பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-
ராபி பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில், சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்கு பயிா் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலூர் குறுவட்டத்தில், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், தெற்கு அவிநாசிபாளையம் குறுவட்டத்தில், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். நடவு முதல் அறுவடைக் காலங்கள் வரை ஏற்படும் வெள்ள பாதிப்பு, காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.
பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள் தங்களின் பிரீமிய தொகையாக சின்ன வெங்காயம் பயிருக்கு ரூ.2,227ஐ அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.4,900ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கு ஏக்கருக்கு ரூ. 98 ஆயிரம் வரை இழப்பீடாக கிடைக்கும்.
மேலும் விவரம் தேவைப்படுவோா் 7708328657, 9095630870 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.