உள்ளூர் செய்திகள்

புகார் அளித்தவரிடம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்திய காட்சி.


ஜம்புக்கல் மலை விவகாரம்: புகார் அளித்தவர்களிடம் உடுமலை ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2023-11-02 10:16 GMT   |   Update On 2023-11-02 10:16 GMT
  • உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
  • அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார்.

உடுமலை:

உடுமலை அடுத்த ஆண்டியகவுண்டனூர் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் ஜம்புக்கல் மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப்பட்டது.

பின்னர் நிலத்தை பெற்றவர்கள் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளால் அதில் திறம்பட சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார். அதன் பின்பு அவர் அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.

இந்த சூழலில் மலைப்பகுதியில் நிலத்தை கிரையம் பெற்ற தனியார் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி உடுமலை ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 2 தரப்பினரையும் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டிய கவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் ஒரு சிலர் விசாரணைக்கு ஆஜராக வில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்"ஜம்புக்கல் மலை விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதில் உண்மை நிலையை கண்டறிந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியதும் அவசியமாக உள்ளது" என்றனர். இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் சுந்தரம், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர்,பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News