நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி - கோ-ஆப் டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
- அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.
அவினாசி:
அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறுமுகை, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பட்டு சேலை வியாபாரிகள் ஆர்டர் வழங்குவர்.தங்கள் தேவையின் அளவு பொருத்து, பாவு நூல் வழங்கி சேலையை நெய்து வாங்கிக் கொள்வர். அதற்கான கூலியை, நெசவாளர்களுக்கு வழங்குவர். சமீப காலமாக ஆர்டர் இல்லாததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்பமே நெசவு தொழிலில் ஈடுபட்டால் தான் ஒன்றரை நாளில் ஒரு சேலையை நெய்து முடிக்க முடியும். வாரத்துக்கு 3,4 சேலைகள் ஆர்டர் கிடைக்கும். ஒரு சேலைக்கு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. தற்போது வாரத்துக்கு ஒரு சேலை மட்டுமே ஆர்டர் கிடைக்கிறது. வருமான பற்றாக்குறையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். ஆர்டர் வழங்கும் வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் இல்லை என்ற காரணத்தை கூறுகின்றனர்.எனவே அரசின் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை அங்காடிகளுக்கு தேவையான சேலையை, எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.
தத்தனூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:-
சாவக்கட்டுப்பாளையத்தில் நெசவாளர்களை உள்ளடக்கி 4 கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. நிர்வாக குளறுபடியால் அவை செயல்படாமல் போயின. தற்போது நெசவாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 100 நெசவாளர்களை உள்ளடக்கி புதிதாக கூட்டுறவு சங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிர்வாக அனுமதிக்காக காத்துள்ளோம். கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேலை நெய்வதற்குரிய பாவு, நூல் உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.
இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.