பயிர்க்கடன் பெறுவதில் புதிய கட்டுப்பாடுகள் - விவசாயிகள் அதிர்ச்சி
- பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கூட்டுறவுத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. ஓராண்டு அவகாசத்துக்குள் திருப்பி செலுத்திவிட்டு அடுத்த 15 நாட்களுக்கு பிறகு மறு சாகுபடிக்கான கடனை பெற்று வருகின்றனர். தற்போது பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-
இம்முறை பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் அறுவடை முடிவதற்குள் பயிர்க்கடனை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும். இல்லாவிட்டால் வட்டி சுமை ஏற்படும். விவசாயிகளின் வீடு ஒரு கிராமத்தில் இருக்கும். விளை நிலம் மற்ற கிராமங்களில் இருக்கும்.வீடு இருக்கும் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திலேயே பயிர்க்கடன் பெற்று வந்தனர். இனிமேல் விளைநிலம் உள்ள கிராமத்தில் தான் பயிர்க்கடன் பெற வேண்டும் என்கின்றனர். இது பல்வேறு பாதிப்புகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
எனவே, பழைய முறைப்படி கூட்டுறவுக்கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஒருவர் கூறுகையில்,கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய விதிமுறைகள் எதுவும் அறிவிக்கவில்லை. பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் அரசுக்கு பல்வேறு சவால்களும், நெருக்கடியும் ஏற்பட்டது. அதற்காகவே பழைய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன என்றார்.