நத்தம் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கோரிக்கை
- சொத்து பத்திரம், வீட்டு மனைப்பட்டா ஆகியவை இருந்தும் வங்கிகளில் கடன் உதவி பெற முடியவில்லை.
- மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி பலரும் சிரமப்பட்டு வருகின்றனா்.
திருப்பூர்:
தமிழகத்தில் நத்தம் நிலங்களை பூஜ்ஜியம் என்ற மதிப்பின்மை வகைப்பாடு ஆக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் சொத்து கிரயம் செய்ய முடியாத பிரச்னைக்கு அரசு தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் பனப்பாளையம் பாலசுப்பிரமணியம், பத்திர ஆவண எழுத்தா்கள் சங்க பல்லடம் கிளைத் தலைவா் ஜெகதீசன், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் பல்லடம் பத்திரப்பதிவு துறை சாா்பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பின்னா் அவா்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக நத்தம் நில பட்டா உரிமையாளா்கள் தங்களது இடத்தை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். ஏனெனில் நத்தம் நிலத்திற்கு அரசு மதிப்பு பூஜ்ஜியமாக பத்திரப்பதிவு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சொத்து பத்திரம், வீட்டு மனைப்பட்டா ஆகியவை இருந்தும் வங்கிகளில் கடன் உதவி பெற முடியவில்லை. அவசர செலவுக்கு இடத்தை அடமானம் வைக்கமுடியவில்லை. இதனால் மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி பலரும் சிரமப்பட்டு வருகின்றனா். அரசு நத்தம் நில வகைப்பாட்டிற்கு உரிய மதிப்பு தொகையை நிா்ணயம் செய்து பத்திரப்பதிவு துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நத்தம் நிலங்களை கிரையம், அடமானம் போன்ற வழக்கமான நடைமுறைப்படி பத்திரப்பதிவு செய்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.