பி.ஏ.பி., திட்டக்குழு தலைவர்- உறுப்பினர் தேர்தல் ஒத்திவைப்பு
- பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.
- முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம், 6மாதம் நீடிக்கப்பட்டு 2014 டிசம்பர் 31ல் நிறைவடைந்தது. அதற்கு பின் தேர்தல் நடத்தவில்லை.
உடுமலை:
பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளை வாக்காளர்களாகக்கொண்டு கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யவும், அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்தல் வாயிலாக தேர்வு செய்ய வேண்டும்.பி.ஏ.பி., திட்டத்தில் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்ட குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009ம் ஆண்டு நடத்தப்பட்டது.முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம், 6மாதம் நீடிக்கப்பட்டு 2014 டிசம்பர் 31ல் நிறைவடைந்தது. அதற்கு பின் தேர்தல் நடத்தவில்லை.
8 ஆண்டு இழுபறிக்குப்பின் கடந்த 2022 மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர், உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 17-ந்தேதி நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.
அடுத்த கட்ட தேர்தல்கள் 11 மாதங்களுக்கு பின் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட 2 பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 18-ந்தேதி பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தாராபுரம், திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகங்களில், மார்ச் 10ந் தேதி நடந்தது.திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள 9 பகிர்மான குழு தலைவர்கள் இணைந்து திட்ட குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், வாக்காளர் பட்டியல், வேட்பு மனு படிவம், ஓட்டுப்பெட்டி என தேர்தல் நடத்துவதற்கு தயாராக இருந்தனர். ஆனால் பகிர்மான குழு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.