தமிழகத்தில் தூய்மைப்பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் - தேசிய தூய்மைப்பணியாளா்கள் ஆணைய தலைவா் பேச்சு
- மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
- தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான நலவாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் பேசியதாவது:-
திருப்பூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலி எவ்வளவு வழங்கப்படுகிறது. இதில், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் ரூ.10, ரூ.20 வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்துக்கு காரணம் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனா். இது மிகவும் தவறானதாகும்.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக ஊதியம் வழங்கக்கூடாது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டத்தில் சோ்த்து அடையாள அட்டையின் எண்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும். கா்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், திரிபுரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மாநில தூய்மைப் பணியாளா் ஆணையம் உள்ளது.
இந்த மாநிலங்களில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக தூய்மை பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே, தமிழகத்திலும் மாநில தூய்மை பணியாளா் ஆணையத்தை அமைக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.
ஒப்பந்த முறையால் சரிவர ஊதியம் வழங்குவதில்லை.பி.எப்., இ.எஸ்.ஐ.கட்டுவது, காப்பீடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஆகவே ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யும்போது அவா்களது வாழ்வாதாரம் உயரும். அனைத்து தொழிலாளா்களையும் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று அரசு நினைத்தால் கா்நாடகம், ஆந்திரத்தில் உள்ளது போன்று அரசு சாா்பில் நேரடியாக அவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். உதாரணமாக திருப்பூா் மாநகராட்சியே ஒப்பந்த தொழிலாளா்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த முறை இல்லாவிட்டால் தொழிலாளா்களுக்கு சரியான முறையில் ஊதியம் சென்றடைவதுடன், தூய்மைப் பணியாளா்க ளுக்கான பிரச்னைகளும் தீரும். ஆகவே, தமிழக அரசு இத்தகைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாநகராட்சி உதவி ஆணையா்கள், நகராட்சி ஆணையா்கள், மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, பேரூராட்சி செயல் அலுவலா்கள், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், தூய்மைப்பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.