உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் - பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

Published On 2022-07-18 04:43 GMT   |   Update On 2022-07-18 04:46 GMT
  • கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன.
  • திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பின்னலாடை ரகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியே ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களையே திருப்பூர் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன.தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பப்படும் சரக்குகள், சிறிய கப்பல்களில் (பீடர் வெசல்) ஏற்றப்பட்டு, கொழும்பு சென்று அங்கு பெரிய கப்பலுக்கு (மதர் வெசல்) மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன. இதனால் சரக்குகள் வெளிநாடுகளை சென்றடைய தாமதமாகிறது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பும் சரக்குகள், கொழும்புவை அடைந்து பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாகிறது. சீசனுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளிநாட்டைச் சென்றடைவது அவசியம். தாமதத்தை வெளிநாட்டு வர்த்தகர்கள் விரும்புவதில்லை.திருப்பூரின் 90 சதவீத சரக்கு போக்குவரத்துக்கு கைகொடுத்துவந்த தூத்துக்குடி துறைமுகத்தை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் போதுமான சரக்கு ஏற்றப்பட்டால் பல பெரிய கப்பல்கள் கொச்சி துறைமுகத்தை புறக்கணித்து விடுகின்றன. திருப்பூரிலிருந்து 250 கி.மீ., தூரத்தில் கொச்சி, 330 கி.மீ.,ல் தூத்துக்குடி துறைமுகங்கள் இருந்தாலும், இந்த துறைமுகங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

விரைவில் சரக்கை அனுப்ப 500 கி.மீ., தொலைவில் உள்ள சென்னை துறைமுகத்தை நாட வேண்டியுள்ளது. செலவும் அதிகரிக்கிறது.திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது. தூத்துக்குடி துறைமுக அதிகாரிகளின் அலட்சியமும், தொலைநோக்கு பார்வையில்லாததும், தமிழக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை பாதிக்க செய்கிறது.எனவே, துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்தி, தூத்துக்குடிக்கு பெரிய கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு துறைமுக சார்பு நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News