திருமூர்த்தி அணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
- மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது.
- நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகிறது. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் தாமதித்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க திருமூர்த்தி அணையில் இருந்து கிராமப்புற குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாசன காலம் நீட்டிக்கப்பட்ட போது ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பாசன நிலங்களுக்கோ கூடுதல் திறப்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. குளங்களையும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்காலிக தீர்வாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். குளங்களில் தண்ணீரை தேக்கினால், பல மாதங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். முதலாம் மண்டல பாசனத்துக்கு போதிய இடைவெளி இருப்பதால், ஆயக்கட்டு பகுதி மட்டுமல்லாது, பிற பகுதிகளிலுள்ள குளங்களுக்கும் பாசன நீரை திருப்பி விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.