உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

நாளை பள்ளிகள் திறப்பு படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதை தடுக்க கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Published On 2023-06-11 04:31 GMT   |   Update On 2023-06-11 04:39 GMT
  • கோடை விடுமுறைக்குப் பின் நாளை 12-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட உள்ளன.
  • உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனூரில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.

உடுமலை:

கோடை விடுமுறைக்குப் பின் நாளை 12-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட உள்ளன. இதற்காக உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறப்புக்கு தயாராக உள்ளன.

பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், ஆபத்தான மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், பள்ளி வளாகத்திற்குள் வளர்ந்து நிற்கும் செடிகளை அப்புறப்படுத்துதல், வகுப்பறையை சுத்தம் செய்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் பணிகள் நடைபெற்று வருகின்றன.எந்தவொரு பணிக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது என்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப்பணியாளர்கள் வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு தூய்மைப் பணிக்கென 2,500 ஒதுக்கீடு செய்தும் பணியாளர்கள் வர தயக்கம் காட்டுகின்றனர்.

இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்களை கொண்டு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் தோறும் இரு தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.கட்டட சீரமைப்பு பணிகள் ஆசிரியர்களின் சொந்த செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல நகராட்சி, பேரூராட்சி நீங்கலாக கிராமப்புற பள்ளிகளுக்கு மட்டும் தூய்மைப்பணிக்கென ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக மாதம் 2,500 ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

இந்த தொகையை பெற்று தூய்மைப் பணி மேற்கொள்ள எவரும் முனைப்பு காட்டுவதில்லை. பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடுமலை அமராவதிநகர் உண்டுஉறைவிடப்பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. மலைவாழ் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு உறைவிடம் மற்றும் உணவு வசதியுடன் அடிப்படை கல்வியும் வழங்க, இப்பள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.இங்கு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மறையூர் உள்ளிட்ட மலைவாழ் பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.பள்ளியின் கட்டமைப்புகளும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான தங்கும் அறைகள், வகுப்பறை கட்டடம், சுற்றுசுவரும் தற்போது கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்கள் எண்ணிக்கை 40க்கும் அதிகமாக இங்கு பராமரிக்கப்படுகிறது. புதிய கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளியை நடுநிலையாக தரம் உயர்த்துவதற்கு கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடுநிலைப்பள்ளியாக மாற்றுவதற்கான இடவசதியும் பள்ளி வளாகத்தில் இருப்பதால் பெற்றோரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நடுநிலையாக தரம் உயர்த்தப்படுவதன் வாயிலாக கூடுதல் மாணவர் சேர்க்கை பதிவு நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

மேலும் மாணவர்கள் துவக்கநிலை கல்வியை நிறைவு செய்தவுடன் நகர்புறப்பள்ளிகளில் வகுப்பு சேர்ந்தும், விடுதி தனியாகவும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பெரும்பான்மையான மலைப்பகுதி பெற்றோர் தயக்கம் காட்டி மீண்டும் மலைப்பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். நடுநிலையாக மேம்படுத்துவதால் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத கல்வி பெற முடியும் என கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், பள்ளியை தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்படுவதால் மாணவர்கள் அதிகம் பயன்பெற முடியும் என்றனர்.

உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனூரில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள குழந்தைகள், அடுத்தடுத்த உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு, மலையாண்டிபட்டணம் உயர்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படிக்கின்றனர்.கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

கொரோனாவுக்கு முன் வரை உடுமலையில் இருந்து கல்லாபுரம் செல்வதற்கு ஆண்டியகவுண்டனூர் வழிதடத்தில் 5-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பின் பஸ்கள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டதோடு, பள்ளி நேரத்தில் பஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் காலை 8மணிக்கு கல்லாபுரத்தில் இருந்து உடுமலைக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சில் பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் என கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஆண்டியகவுண்டனூரில் இருந்து செல்லும் மாணவர்கள் வேறு வழியில்லாமல் கூட்ட நெரிசலில் பயணிப்பதால் பள்ளிக்கு செல்லும் முன்பே சோர் வடைந்து விடுகின்றனர். கூட்ட நெரிசலால் பல குழந்தைகள் பஸ்சில் ஏறாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதும் நடக்கிறது. மாணவர்களை தனியார் வாகனங்களில் வாடகை செலுத்தி அனுப்பும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.இப்பிரச்சினையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி நேரத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும்நாளை 12-ந் தேதி பள்ளி–கள் திறக்கப்படவுள்ளன. பள்ளி வாகன விபத்துகள் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி வாகன பராமரிப்பு, மேலாண்மை குறித்து, பள்ளி முதல்வர், மேற்பார்வையாளர், விளையாட்டு அலுவலர்களிடம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் கூறியதா–வது:- பள்ளி வாகனத்தின் முன்னும், பின்னும் உள்ள கேமராக்கள், ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், தீயணைப்பான்கள், முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி, பள்ளி மாணவர்கள் ஏறி இறங்கும் படிக்கட்டுகள் ஆய்வுக்–குட்படுத்தப்பட்டன. ஆய்வின்போது பல பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்தப்படாமல் இருந்தது. அந்தப் பள்ளி வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை 12-ந் தேதிக்குள் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கட்டாயமாக கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் கேமரா குறித்து கடந்த ஒரு வருடமாக பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். அதில் பலரும் பள்ளி வாகனங்களில் பொருத்தப்படும் கேமரா கிடைக்கவில்லை என்று காலம் தாழ்த்தி வந்தனர். அதற்கான கால அவகாசம் முடிந்து–விட்டது. தற்போது மீண்டும் கேமரா பயன்படுத்தப்படாமல் வாகனங்களை இயக்கினால் பள்ளி வாகனம் வட்டார போக்குவரத்து சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News