ருத்ராட்சம் அணிந்த சிவனடியாருக்கு சிவநெறி தொண்டு செய்ய வேண்டும் ஸ்ரீசிவக்கார தேசிக சுவாமிகள் உரை
- சிவனடியார்கள், யாராவது ஒருவரை குருவாக ஏற்று, சிவவழிபாடுநடத்தி வர வேண்டும்.
- தினமும் வழிபாடு நடத்தி, ஆடல்வல்லான் அம்பலவாணனின் அருளை பெறலாம்.
திருப்பூர்:
திருப்பூர் திருமுறை சைவநெறி அறக்கட்டளை சார்பில் சுந்தரமூர்த்தி நாயனாரின், தேவார முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிறைவு நாளன்று ஸ்ரீசிவாக்கர தேசிக சுவாமி பேசியதாவது:-
சிவனடியார்கள், யாராவது ஒருவரை குருவாக ஏற்று, சிவவழிபாடுநடத்தி வர வேண்டும்.குருவருள் இருந்தால் மட்டுமே திருவருளை பெற முடியும். நாயன்மார்கள், ஞானிகள், சித்தர்களில் யாராவது ஒருவரை, மானசீக குருவாக நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.யார் ஒருவரையும் பார்க்கும் போது, எண்ணம், செயல், சொல் ஆகியவற்றை பிரயோகிக்க முடியாத நிலை வருமானால், அவரே உமது குரு. ஏதாவது பலனை எதிர்பார்த்து, தேவார திருமுறைகளை பாடக்கூடாது.எதிர்பார்ப்பின்றி, இறைபக்தியுடன் பதிங்களை பாடுவதால் அனைத்துமே கிட்டும். பட்டியல் போட்டு கோரிக்கையை வைப்பதால், அவ்வளவு எளிதாக இறைவன் இரக்கம் காட்டுவதில்லை.
ருத்ராட்சம் அணிந்து சிவனடியாருக்கு தொண்டு செய்வதே சிவநெறி. தொண்டு செய்வதில், சிறியது - பெரியது என்பது இல்லை. மானசீகமாக தொண்டாற்றுபவரே உண்மையான சிவனடியார். ஞானசம்பந்தரும், ராமானுஜரும் ஜாதிகளை கடந்து, சமயங்களை வளர்த்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புரட்சியாளராக இருந்தனர்.சைவ நெறியில் இருப்பது போல் மற்ற சமயங்களில் உள்ள நல்ல வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஸ்ரீநடராஜர் படத்தை வீடுகளில் வைத்து தினமும் வழிபாடு நடத்தி, ஆடல்வல்லான் அம்பலவாணனின் அருளை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.