உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது - மேயர் பேச்சு

Published On 2023-01-30 05:36 GMT   |   Update On 2023-01-30 05:36 GMT
  • எங்களை உறங்க விடாமல் செய்யும் மிகப் பெரிய பிரச்சினையாக திருப்பூரில் குப்பை பிரச்னை உள்ளது.
  • திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி, மேற்கு ரோட்டரி மற்றும் துப்புரவாளன் அமைப்பு ஆகியன இணைந்து திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு குறும்பட வெளியீடு ஆகிய நிகழ்ச்சியை நடத்தின. துப்புரவாளன் அமைப்பு இயக்குநர் மோகன் வரவேற்றார். அமைப்பாளர் பத்மநாபன் அதன் நோக்கம் குறித்து பேசினார்.

மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை மற்றும் அவற்றை முறையாக மாற்று வழியில் பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

எங்களை உறங்க விடாமல் செய்யும் மிகப் பெரிய பிரச்சினையாக திருப்பூரில் குப்பை பிரச்னை உள்ளது. நகரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சேகரமாகும் குப்பை தான் காரணமாக உள்ளது.திடக்கழிவு மேலாண்மையை மக்கள் இயக்கமாக கொண்டு செல்கிறோம். இதில் தன்னார்வ அமைப்புகள் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இவற்றுடன் மக்கள் ஒத்துழைப்பையும் அளித்தால் நிச்சயம் இந்த சவாலை எதிர் கொண்டு சமாளித்து வெற்றி பெற முடியும்.

குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கினால், அவற்றை மறு சுழற்சி முறையில், நுண்ணுயிர் உரம், மின்சாரம், இயற்கை எரிவாயு, கட்டுமானப் பொருள் என பல விதங்களில் பயன்படுத்த முடியும். தற்போது 4 வார்டுகளில் செகன்டரி பாயின்ட் என்ற குப்பை குவியும் பகுதி இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் 60 வார்டுகளிலும் இது நடைமுறைக்கு வரும்.

வீடுகளில் சேகரமாகும் குப்பை 800 மெட்ரிக் டன் அளவும், தொழிற்சாலை கழிவு மேலும் 600மெட்ரிக் டன். மாதம் சராசரியாக 30 ஆயிரம் மெட்ரிக் டன் சேகரமாகிறது. குப்பைகளை தரம் பிரித்தாலும் அவை ஒன்றாகவே பாறைக்குழிகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது. நிர்வாகத்துக்கு அதிக செலவும் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பேசு கையில், 'திருப்பூரைப் பொறுத்தவரை வீடு, கடை, ஓட்டல், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து விதமான கழிவுகளும் ஒன்று சேர்ந்து சேகரமாகிறது. இதைப் பிரித்து முறையாக மாற்று முறையில் பயன்படுத்தினால் அதை பலன் தரும் விதமாக கையாள முடியும்' என்றார்.துணை மேயர் பாலசுப்ரமணியம், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News