திருப்பூர் மாவட்டத்தில் 6 மாதங்களில் ரூ.2.50 லட்சம் கோடிக்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை - மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தகவல்
- பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
- டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. படித்தோர், படிக்காதோர் என யார்வேண்டுமானாலும், கையில் செல்போன் இருந்தால் போதும், மிக எளிதாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. இதனால் நேரம் மிச்சப்படுத்தப்படுவதுடன், பண பாதுகாப்பு, சில்லரை தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மீதான மக்களின் ஆர்வம் அதிகரிக்க முக்கிய அம்சமாக உள்ளன.
அந்த வகையில், டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதத்தில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி கூறியதாவது:-
பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். பொதுமக்கள், வர்த்தகர்கள் மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 2.59 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக பீம் மற்றும் யு.பி.ஐ., மூலமாக மட்டும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 812 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. பீம் மற்றும் ஆதார் வாயிலாக 4,971 கோடி ரூபாய், பாரத் க்யூ.ஆர்., கோடு வாயிலாக 94.84 கோடி, ஐ.எம்.பி.எஸ்., மூலம் 90,423 கோடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக 3,679 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இணையதளம் இல்லாத யு.எஸ்.எஸ்.டி., மூலம் 160 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. வரும் நாட்களில் பணமில்லா பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.