திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் தொடக்கம்
- இம்மருத்துவ முகாமில் பங்கேற்ற 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
- இச்சிறப்பு மருத்துவ முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சி, அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு மருத்துவ முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறன் சதவீதம் குறித்து அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இம்மருத்துவ முகாமில் பங்கேற்ற 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும், இதுபோன்று மருத்துவ முகாம்கள் இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்திலும்,நாளை 11-ந்தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளிரோடு உடுமலைப்பேட்டையிலும் நடக்கிறது.
12-ந்தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , 13-ந் தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,16-ந்தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வளமையம், 17 -ந்தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , 18-ந்தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி , 19-ந்தேதி பொங்கலூர் பி.யுவி. என்.தொடக்கப்பள்ளி , 26-ந்தேதி குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி , 27-ந்தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,31-ந்தேதி மூலனூர்அரசு மேல்நிலை ப்பள்ளி மற்றும் 1.11.2023 அன்று திருப்பூர் வடக்கு தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு மருத்துவ முகாம் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். எனவே சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டாரங்கள் தோறும் நடைபெறுவதால் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இம்முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.