நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சாலையோரம் உறிஞ்சுகுழி அமைக்கும் பணிகள் தீவிரம்
- நிலத்தடியில் சேகரமாகும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
- மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
அவிநாசி:
கிராம ஊராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆட்சியின் போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டன.
தற்போது கிராம ஊராட்சி பகுதியில் பொதுகுடிநீர் குழாய் உள்ள இடங்களில் உறிஞ்சு குழி அமைத்து, குழாயில் இருந்து வீணாகி வெளியேறும் தண்ணீர், நிலத்தடியில் சேகரமாகும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கடந்தாண்டுகளில் அவிநாசி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மழையால் குளம், குட்டைகள் நிரம்பி ததும்பின. இதனால், நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்தது.இதன் தொடர்ச்சியாகதற்போது கிராம ஊராட்சிகளில், சாலையோரம் உள்ள இடங்களில் உறிஞ்சு குழி அமைக்கும் பணி நடந்து வருகிறது.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும், இப்பணியில், தினமும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் தற்போது பெய்யும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.