நீர்நிலைகள் தான் அழியாத சொத்து - சிம்லா கலெக்டர் பேச்சு
- கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
- விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியம், பொன்னிவாடி கிராமத்தில் உள்ளது நல்லதங்காள் ஓடை அணை.இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. ஓடையின் நீர்த்தேக்க பகுதியில், சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த போது, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை துவக்கினார். பொன்னிவாடி கிராமத்தில் உள்ள அந்த அமைப்பின் கிளை சார்பில் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி நடந்துவருகிறது.
சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மூலனூர் அருகே கோணேரிப்பட்டி கிராமத்தில் இருந்து, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பால்ராசு, தற்போது இமாச்சலபிரதேசம் சிம்லா மாவட்ட கலெக்டராக இருக்கிறார். விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
பால்ராசு கூறுகையில், அணைக்கட்டு மொத்தம் 937 ஏக்கரில் அமைந்துள்ளது.அவற்றில் 800 ஏக்கர் அளவுக்கு சீமைக்கருவேல மரம் வளர்ந்துள்ளது. அவற்றை முழுமையாக அகற்றி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகள் தான் அழியாத சொத்து.அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கம் 'நமது சொத்து' என்று பராமரிக்க வேண்டும் என்றார்.