உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் தர்ணா
- கடந்த 20 நாட்களாக குடிநீர் வராததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
- அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
உடுமலை:
உடுமலை ஒன்றியம் பூலாங்கிணறு மற்றும் ராகல்பாவி ஊராட்சிகளுக்கு திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது சீராக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. கடந்த 20 நாட்களாக குடிநீர் வராததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிடுவதற்காக பூலாங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா, ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மற்றும் மன்ற உறுப்பினர்கள் உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அதிகாரிகள் சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதில் அதிருப்தி அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்களும் உறுப்பினர்களும் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய பதில் அளிக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி தரையில் அமர்ந்து இருந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், திருமூர்த்தி அணை குடிநீர், பழைய திட்டத்தின்அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. புதிய திட்டத்திற்கு மாற்றிய பிறகு கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வருவதில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர்.
வாக்களித்த மக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இங்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஊராட்சி பகுதிகளில் மக்கள் தொகை பெருகிவிட்டது. எனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.