சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
- ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர்.
- சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தாராபுரம்:
விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி அன்று வருகிறது. அதையொட்டி தாராபுரம், உடுமலை பகுதியில் மண்பாண்ட கலைஞர்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தாராபுரம் உடுமலை ரோடு பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடுவர். அன்றைய தினம் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். அதில் காவல் விநாயகர், மோட்டார் வாகன விநாயகர் என பல உருவங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவர். அன்று விநாயகருக்கு பிடித்தமான கொளுக்கட்டை, அவல்,பொறி மற்றும் இனிப்புகள் படையல் வைத்து பூஜைகள் நடைபெறும். சில இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
பின்னர் அடுத்த நாள் அல்லது 3 நாட்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதற்கான விநாயகர் சிலைகள் தற்போது தயாரித்து வருகிறோம். அந்த சிலைகள் அரை அடிமுதல் 3 அடி உயரம் வரை உள்ளதாக தயார் செய்து உள்ளோம். அவற்றிற்கு கண்ணை கவரும் வண்ணங்கள் கொடுத்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.