சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பூ, அருகம்புல், துளசி வைத்து பூஜை
- கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்கு.
- 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது.
காங்கயம் :
கொங்கு மண்டலத்தில் புகழ்மிக்க கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்கு.
இந்த கோவிலில்தான் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட வேண்டிய பொருளை கூறி வருவதும், அதன்படி அந்த பெட்டியில் அப்பொருளை வைத்து பூஜை செய்யப்படுவதும் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். கனவில் முருகப்பெருமானின் உத்தரவு கிடைக்கப்பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். கோவில் நிர்வாகிகள் சாமியிடம் பூ போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலைய பகுதியை சேர்ந்த முருக பக்தரான கற்பகம் (வயது 56) என்ற பெண் பக்தரின் கனவில் உத்தரவான நந்தியாவட்டம் பூ, அருகம்புல், துளசி ஆகியவை நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த 13-ந் தேதி முதல் 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது. தற்போது ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் நந்தியாவட்டம் பூ, அருகம்புல், துளசி போன்றவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும் என பக்தர்கள் கூறினர்.