தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை
- குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை கேட்டு சிலா் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனா்.
- பட்டியலின பெண் சமைக்கும் உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம்.
பெருமாநல்லூர்:
திருப்பூரில் அரசுப் பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட விடாமல் தடுத்தவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில், பட்டியலினத்தைச் சோ்ந்த பெண் உணவு சமைத்ததால், அதனை சாப்பிட விடாமல் தடுத்து குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை கேட்டு சிலா் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனா்.
பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக அவா் சத்துணவு சமைக்கக் கூடாது என்றும், அவா் சமைக்கும் உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும் சிலா் பிரச்சினைகள் செய்வது ஏற்புடையதல்ல.
எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உணவை சாப்பிட விடாமல் தடுத்தவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.