உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஞாயிற்றுக்கிழமை செயல்படும் சாலையோர கடைகள் வாரச்சந்தைக்கு மாற்றம் - போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை

Published On 2023-09-24 10:05 GMT   |   Update On 2023-09-24 10:05 GMT
  • சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறாா்கள்.
  • ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்க அனுமதி இல்லை,

அவிநாசி

அவிநாசி நகரப்பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள் முன் அதிக அளவில் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறாா்கள். ஆகவே வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், காவல் ஆய்வாளா்கள் ராஜவேல், சக்திவேல்(போக்குவரத்து), நெடுஞ்சாலைத்துறை அலுவலா் சுப்பிரமணியம், பேரூராட்சி சுகாதார அலுவலா் கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வியாபாரிகள், வணிகா்கள், தொழிற்சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் சாலையோர கடைகள் அவிநாசி வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம் செய்யப்படும். அதேபோல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்க அனுமதி இல்லை, தள்ளுவண்டியில் விற்பனை செய்யும், உணவுப் பொருள்கள் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அனுமதி பெற்று நடத்த வேண்டும். வாரச்சந்தை வளாகத்தில் மாற்றிக் கொடுக்கப்படும் கடைகளுக்கு தற்போது பேரூராட்சி மூலம் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படும். உழவா் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் வேளாண்மை அலுவலக வளாகத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும்.

ஒலிபெருக்கி மூலம் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தற்காலிகமாக அடையாள அட்டை அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து சாலையோர வியாபாரிகள் பெற்றுக் கொள்ளலாம்.

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தக் குழு அமைக்கப்படும். மேலும், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் அக்டோபா் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News