ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு - அன்னதானம் : பக்தர்கள் குவிந்தனர்
- மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
- கேழ்வரகு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் :
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
மஞ்சள் காப்பு அலங்காரத்தில் திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன். வனபத்ரகாளியம்மன் அலங்காரத்தில் வாலிபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.