முத்திரைத்தாள் தட்டுப்பாடு - முதல்-அமைச்சருக்கு விற்பனையாளர்கள் மனு
- முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
- 4 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:- முத்திரைத்தாள் சங்கத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு போதிய அளவு முத்திரைத்தாள் விற்பனைக்கு கிடைப்பதில்லை. தமிழகம் முழுவதும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்நிலையில் உள்ளனர். கடந்த 4 மாத காலமாக திருப்பூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. மாவட்டத்தில் 160 முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் உள்ளனர். இவை கிடைக்க பெறாத சூழ்நிலையில் இ-ஸ்டாம்ப் மூலம் தொகை செலுத்தி ஆவணத்தை பதிவு செய்து கொள்ள மக்கள் அலுவலகம் செல்கின்றனர்.
ஆனால் இ-ஸ்டாம்பையும் பயன்படுத்தாமல் முத்திரைத்தாள்களுக்கு உண்டான தொகையை காசோலையாக செலுத்தி பத்திரத்தை பதிவு செய்கின்றனர். எனவே போதிய அளவு முத்திரைத்தாள் கிடைக்க பெற வேண்டியும் இ-ஸ்டாம்ப் மூலம் கட்டாயம் பணத்தை செலுத்தி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.