குற்ற சம்பவங்களை தடுக்க வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்
- மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு, இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.
- கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது:- பல்லடம் உட்கோட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில்,கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதன் மூலம்,குற்றங்களை தடுக்க முடியும். முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில், கண்காணிப்புக் கேமராக்கள், பொருத்தப்படுகின்றன.
இதன் மூலம், குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு, இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.வீடுகளில், ஆட்கள் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து, வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும், இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில், அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.
வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம், வீடுகளில், திருட்டு, உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும்.
சமீபத்தில் நடந்த சில, கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை,வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு, குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல், அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.