மடத்துக்குளம் வட்டாரத்தில் 255 எக்டரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு
- சிறு, குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
- 75 சதவீதம் வரை மனித உழைப்பு சேமிக்கப்படுகிறது.
மடத்துக்குளம் :
மடத்துக்குளம் வட்டாரத்தில், மானிய திட்டத்தின் கீழ் 255 ஹெக்டருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
பிரதமரின் நுண்ணீர்பாசனத்திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு நீர் சிக்கனம், களைகள் கட்டுப்படுத்துதல் மற்றும் அதிக விளைச்சலுக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்த முறையாகும்.நீண்ட கால வயதுடைய பயிர்களுக்கும், காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். சொட்டுநீர் பாசனம் வாயிலாக, திரவ உரங்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய உரங்களை, வெஞ்சுரி மற்றும் நீரேற்றம் கருவிகளின் உதவியுடன் பாசன நீரில் கலந்து உரங்களை பயிரின் வேர்பாகத்தில் நேரடியாக கொடுக்கலாம். பயிரின் தேவைகேற்ப உரத்தை பலமுறை பிரித்து இடவும் சாத்தியமாகிறது. பாசன நீரும் உரமும் தொடர்ந்து வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால், நடவு முதல் அறுவடை வரை, பயிர் வளர்ச்சி நன்கு அமைந்து, விளைச்சல் அதிகரிக்கிறது.
மணற்பாங்கான பூமி மழை குறைவான பகுதிகள், சரிவான பகுதி மற்றும் பாசன முறைகளில் பயிர் சாகுபடி மேற்கொள்ள இயலாத பகுதி போன்ற நிலங்களுக்கு சொட்டு நீர் பாசனம் சிறந்த முறையாகும்.பயிர் சாகுபடி பரப்பில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே ஈரமாக்கபடுவதால் களை வளர்ச்சி பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.மேலும் 75 சதவீதம் வரை மனித உழைப்பு சேமிக்கப்படுகிறது. பூச்சி, பூஞ்சாணங்களின் தாக்குதல் மிகவும் குறைகிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 855 ரூபாய் வரையும், மற்ற விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.மேலும் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தோட்டகலைத்துறை வாயிலாக டீசல் பம்ப்செட், மின் மோட்டார் பம்ப் செட் நிறுவ 50 சதவீதம் மானியம், ரூ.15 ஆயிரமும், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம், 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.அதோடு, பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 50 சதவீதம் என ஒரு கன மீட்டருக்கு ரூ.350 வீதம், ஒரு பயனாளிக்கு ரூ. 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மடத்துக்குளம் உள் வட்டத்தைச் சார்ந்த கிராமங்களுக்கு மட்டும் போர்வெல் அமைக்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மடத்துக்குளம் வட்டாரத்தில் காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர், கணியூர், மெட்ராத்தியை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன்- 96598 38787 என்ற எண்ணிலும்,கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அ.கண்ணாடிபுத்தூர், பாப்பான்குளம், ச. கண்ணாடிபுத்தூர் விவசாயிகள் உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் - 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்தும், சொட்டு நீர் பாசன விபரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.