விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் டி.ஐ.ஜி. ஆய்வு
- 2 வருடங்களுக்கு பிறகு சிலைகளை அமைத்து வழிபட அனுமதி
- முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்தியபிரியா ஆய்வு செய்தார். விநாயகர் சதுர்த்தி விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வார்கள்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி விநாயகர் சிலைகளை அமைக்க விரும்புவோர் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகளை அமைக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் வழிதடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளதாக இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் தெரிவித்தார். தொடர்ந்து வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் திருவண்ணாமலை காந்திசிலை அருகிலிருந்து இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன விழாவையொட்டி புறப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாமரை குளத்தில் நிறைவடையவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றபோது இருதரப்பினர் கோஷ்டி மோதல் காரணத்தினால் கலவரம் ஏற்பட்டது.
இதுபோன்று எந்தவித அசம்பவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்தியபிரியா திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.