அமைச்சரிடம், ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மனு
- நாகையில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
- அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை வைத்தார்.
நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழமையும் சிறப்பும் மிக்கது.
எனவே அது தனித்துவத்துடன் இயங்குவதற்கு ஏற்ப, பாரம்பரிய அரசு கட்டடத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அக்கட்டடத்தை முழுவதுமாக அருங்காட்சியகத்திற்கு ஒதுக்க வேண்டும்.
நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
அவற்றை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நாகப்பட்டினம் பெளத்த சிலைகளை நிரந்தரமாக காட்சிப்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
இது குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.