உள்ளூர் செய்திகள்

தேக்கடி ஏரியில் உலாவரும் யானைகள்.

தேக்கடி ஏரி பகுதியில் கூட்டமாக வரும் யானைகளால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2023-06-08 05:48 GMT   |   Update On 2023-06-08 05:48 GMT
  • நீர் நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம்.
  • யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.

கூடலூர்:

சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுது போக்கு அம்ச ங்கள் உள்ளன. படகு சவாரியின் போது நீர் நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம்.

இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விருப்பத்தில் படகு சவாரி முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385. நுழைவு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.25 அடியாக குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரைப்பகுதிக்கு வருகின்றன.

இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி படகுத்துறை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக் கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.

மேலும் இது போன்ற வன விலங்குகள் மற்றும் பறவைக் கூட்டங்களை படகு சவாரியின் போது காண்பது கண்களுக்கு விருந்தாக அமைந்தது என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News