குரங்கு நீர்வீழ்ச்சி வர சுற்றுலா பயணிகளுக்கு தடை
- நீரோடைகள் மூலம் நீர் வரத்து உள்ளது.
- சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பொள்ளாச்சி,
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதிகளில் இருந்து உருவாகும் நீரோடைகள் மூலம் நீர் வரத்து உள்ளது. இங்கு குளிக்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகளின் காரணமாக நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் கொட்டியது. ஆனால் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர் வரத்து முற்றிலும் குறைந்து போனது.
இதனால் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது. இதன் காரணமாக தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும் தண்ணீர் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.
இதனால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் தடை விதித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, மழை பெய்து மீண்டும் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நுழைவாயில் பூட்டப்பட்டு யாரும் அத்துமீறி உள்ளே செல்வதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.