உள்ளூர் செய்திகள்

வார விடுமுறை நாளான இன்று ஒகேனக்கல்லுக்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published On 2024-06-23 05:04 GMT   |   Update On 2024-06-23 05:04 GMT
  • வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
  • காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.தொடா் விடுமுறை, வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

இந்த நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவுற்று பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து இருந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 700 கன அடியாக குறைவாக வந்திருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றில் பரிசல் பயணம்தனியார் ஒப்பந்தம் முடிந்த நிலையில் தமிழக அரசே படகு சவாரி இயக்கி வருகிறது.

இந்த படகு சவாரி பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்து கடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து தொம்பச்சி கல் வழியாக பெரிய பாணி, மணல் மேடு வரை காவிரி ஆற்றின் பாறைகளுக்கு இடையே உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். ஒரு சில படகோட்டிகள் பாதுகாப்பு உடை இல்லாமலேயே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைப்பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

மீன் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரஞ்சான் , பாப்புலேட் உள்ளிட்ட வகை மீன்களின் விலை ரூ.200 முதல் ரூ.1,500 வரை விலை கொடுத்து வாங்கி சமைத்து குடும்பத்துடன் ருசித்து ரசித்து உணவருந்தினர்.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை போலீஸ் நிலையம், பஸ் நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிற்கும் இடம், சத்திரம் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தியிருந்தனா்.

அதிக கூட்டம் நெரிசலால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News