உள்ளூர் செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடரும் எதிர்ப்பு: 3-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம்

Published On 2024-07-01 03:04 GMT   |   Update On 2024-07-01 03:04 GMT
  • போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
  • போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:

சென்னைக்கு அடுத்தபடியாக மிக பெரிய விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 705 நாட்களாக மாலை நேரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தேர்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 58 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை தவிர மற்ற 57 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏகனாபுரம் கிராமத்தை புறக்கணிப்பு செய்வதை கண்டித்தும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 3-ந்தேதி (புதன் கிழமை) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மட்டும் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இதன் காரணமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News